நெஞ்சில் புதைந்த அமெரிக்காவின் அணு குண்டு வீச்சு !!
நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படம்
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்தது, ஊனமாக பிறக்க வைத்தது, தோலை கருக்கியது, கதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.
காளான் மேகம்
இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் தேதி அது நிகழ்ந்தது. உலகம் அதுவரை கண்டிராத அரக்கன் ஒருவன் உலகத்தாருக்கு அறிமுகமானான். அவனுக்குப் ‘சிறிய பையன்’(Little Boy) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் அவன் ஒரு பெரும் அரக்கன். கணநேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த அரக்கன் . உலகம் இன்றுவரை அவனை நினைவில் வைத்திருக்கிறது. அவன் வேறு யாருமல்ல, அணுகுண்டு என்னும் பேரரக்கன் தான் அவன்.
வட அமெரிக்கா தன் கொடுரத்தன்மையின் மற்றொரு முகத்தை அன்று வெளிக்காட்டியது. ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மீது முதல் அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த அடுத்த நொடியில் எழுவதாயிரத்திலிருந்து என்பதாயிரம் மக்கள் தீயில் கருகி மாண்டுப் போனார்கள். அதாவது அந்நகரத்தின் முப்பது சதவிதம் மக்கள் நொடியில் சாம்பலானார்கள். மேலும் எழுபதாயிரம் மக்கள் படுகாயம் அடைந்தனர். அதன்பின் 90,000 முதல் 1,66,000 மக்கள் வரை குண்டு வெடிப்பின் பின் விளைவுகளால், அதாவது தீக்காயம், கதிரியக்க பாதிப்பு போன்றவற்றால் இறந்துப் போனார்கள். 1950 வரை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் இறந்துபோனார்கள் என்ற கணக்கும் இருக்கிறது. மேலும் 1950-இல் இருந்து 2000ஆம் ஆண்டுக்குள், அந்த குண்டு வெடிப்பில் தப்பிப் பிழைத்தவர்களில் 46 சதவிதம் பேர் கதிரியக்கத்தால் உண்டான நோயினாலும், 11 சதவிதம் பேர் புற்று நோயினாலும் மாண்டுப்போனார்கள்.
அணுவால் வந்த அழிவு
ஹிரோஷிமாவின் மீது அணுகுண்டுப் போட்ட மூன்றாம் நாள், அதாவது ஆகஸ்டு 9, 1945 ஆம் ஆண்டு ஜப்பானின் நகரமான ‘நாகசாகி’ மீது வட அமெரிக்கா மற்றொரு அணுகுண்டைப் போட்டது. ‘கொழுப்பு மனிதன்’ அல்லது ‘குண்டு மனிதன்’(Fat man) என்று பெயரிடப்பட்ட அந்தக் குண்டு நாகசாகி மீது விழுந்த கணம், நாற்பதாயிரத்திலிருந்து எழுபதாயிரம் மக்கள் சாம்பலாகிப்போனார்கள். 1945-இன் இறுதிவரை என்பதாயிரம் பேர் இறந்துப் போனார்கள்.
இரண்டு அணுகுண்டுகளும், அது போடப்பட்ட மைத்திலிருந்து பல மையில்களுக்கு தன் பாதிப்புகளை ஏற்படுத்தியன. குண்டு விழுந்த அடுத்தக் கணம் ஒன்றிலிருந்து மூன்று மையில்களுக்கு இடைப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் தரை மட்டமாயின. பல மையில் தூரம் பரவிய தீ மீதமிருந்ததை எல்லாம் சாம்பலாக்கியது. தொன்னூறு சதவித நகரம் நொடியில் தரைமட்டமானது. அணுகுண்டு வெடிக்கும் போது உருவாகும் புகை மூட்டத்திற்கு ‘காளான் மேகம்’(Mushroom Cloud) என்றுப் பெயராம்.
நாகசாகி அணுகுண்டுக்கு முன் - பின்
அதுநாள் வரை உலகம் அப்படியான ஒரு பேரழிவை பார்த்ததில்லை. அதுவும் ஒரே ஒரு வெடிகுண்டால் இப்படியான அழிவை ஏற்படுத்த முடியும் என்பது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இத்தகைய ஒரு பேரழிவு ஆயுதத்தை உருவாக்கவும் அதை மற்றவன் மீது பிரயோகிக்கவும் முடியும் என்பது உலகம் கண்டு கொண்டு பெரும் அதிர்ச்சிகளில் ஒன்று.
இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு சிறிது காலம் முன்பாக ஆகஸ்டு 2, 1939 ஆம் ஆண்டு ‘ஆல்பட் ஐன்ஸ்டீன்’ அப்போதைய வட அமெரிக்க அதிபர் ‘பிராங்களின் ரூஸ்வெல்ட்க்கு’ ஒரு கடிதம் எழுதினார். அதில், ஜெர்மனியர்கள் ‘யுரோனியம்-235’ என்னும் தனிமத்தை சுத்திகரிக்கிறார்கள் அதன் மூலம் அணுகுண்டு செய்ய முடியும் என்பதை குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகே வட அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்பைப் பற்றி சிந்திக்கத் துவங்கியது. ஜெர்மனியர்கள் அணுகுண்டை தயாரித்து பயன்படுத்திவிடக் கூடாதே என்ற பயம் அவர்களை ஆட்டிப்படைக்கத் துவங்கியது . தாங்கள் முந்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலும் அவர்களுக்கு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ‘மேன்ஹாட்டன் புராஜக்ட்’("The Manhattan Project") என்ற பெயரில் அணுகுண்டு தயாரிப்புச் சார்ந்த பனிகள் துவங்கப்பட்டன. பல கட்டங்கள் தாண்டி அணுகுண்டு உருவாக்கப்பட்டது. பின்பு ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு மெக்சிகோவின் வட பகுதியில் அமைந்த ‘ஜெமிஸ் மலைப்பகுதியில்’(Jemez Mountains) ‘The Gadget’ என்றுப் பெயரிடப்பட்ட முதல் சோதனை அணுகுண்டு பரிசோதிக்கப்பட்டது. அது ஏற்படுத்திய அழிவு வட அமெரிக்கர்களை உற்சாகப்படுத்தியது.
ஹிரோஷிமா அணுகுண்டுக்கு முன்-பின்
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டைப் போட்டதற்கு வட அமெரிக்கா சொல்லும் காரணம், ஜப்பான் சரண் அடையவேண்டும் அதன் மூலம் இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டுவருவதும் ஆகும். ஆனால், அப்போதைய காலகட்டத்தில் ஜப்பான் சரண் அடையும் நிலையில்தான் இருந்தது. ஏனெனில் இரண்டாம் உலகப்போர் அப்போது அதன் இறுதி நிலையை அடைந்திருந்தது. பெரும்பாலான தேசங்கள் தோல்வியை தழுவி இருந்தன. இரண்டாம் உலகப் போரின் மூல கர்த்தாவான இட்லர் இறந்துப் போய்விட்டார், இத்தாலியின் முசோலனி அவரின் மக்களாலையே கொல்லப்பட்டுவிட்டார். மேலும் மே 7, 1945-இல் ஜெர்மன் நேச நாட்டு படையிடம் சரண் அடைந்திருந்தது.
அப்போதைக்கு ஜப்பானும் பெருத்த சேதம் அடைந்திருந்தது. எந்நேரத்திலும் அது சரண் அடைவதற்கான முகாந்திரம் இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையொப்பமிட ஜப்பானும் தயாராகத்தான் இருந்தது, சில கட்டுப்பாடுகளில் மட்டுமே முரண் பட்டிருந்தது. விரைவில் ஜப்பான் சரண் அடைந்து விடும், போரும் முடிவுக்கு வந்துவிடும் என்ற சூழல்தான் அப்போது நிலவியது. எனில் அணுகுண்டுப் போட்டுத்தான் ஜப்பானை வழிக்கு கொண்டு வர வேண்டிய தேவையே அப்போது இல்லை.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் காளான் மேகங்கள்
இந்நிலையில் வட அமெரிக்கா அணுகுண்டை பயன்படுத்தக் காரணம் என்ன? வேறு என்னவாக இருந்துவிட முடியும்..ஒரு வார்த்தையில் சொல்லவதானால்..திமிறு அல்லது அயோக்கியத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்போதைய மதிப்பில் இரண்டு பில்லியன் டாலர்(தற்போதைய மதிப்பில் 26 பில்லியன் டாலர்) செலவுச் செய்து உருவாக்கிய அணுகுண்டை எப்படி பயன்படுத்தாமல் இருக்க முடியும். மேலும் அவ்வளவு செலவுச் செய்து தயாரித்த குண்டின் பயன் என்ன என்று மக்களுக்கு காட்டாவிட்டால் பின்பு எப்படி அத்திட்டத்தை தொடர்வது, அதற்கானப் பணத்தை மக்களின் வரிப்பணத்திலிருந்து எப்படி எடுக்க முடியும்? போன்ற கேள்விகள் ரூஸ்வெல்டின் முன் வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பணம் பிடித்த திட்டத்தின் பயனை மக்களுக்கு காட்டாவிட்டால், அது பல அரசியல் பிரச்சனைகளை உங்களுக்கு கொண்டு வரும் என ரூஸ்வெல்ட் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்
அதுவும் இல்லாமல், வட அமெரிக்கர்கள் இரண்டு வகையான அணுகுண்டு தயாரிப்பு முறைகளைப் பின்பற்றி இருந்தனர். ஒன்று ‘யுரேனியம்’ மூலமாகவும் மற்றொன்று ‘புலுட்டோனியம்’ மூலமாகவும் பெறப்படுவது. இவை இரண்டில் எது சக்தி வாய்ந்தது என்று தெரிந்துக் கொள்வது அவசியமாகிருந்தது.
சிறிய பையன்
‘கொழுப்பு மனிதன்’ அல்லது ‘குண்டு மனிதன்’
இந்நிலையில், இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குள்ளாக அவற்றைப் பரிசோதித்துப் பார்த்துவிட முயன்றனர். அதன் தொடர்ச்சியாக ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. காரணம் அந்நகரம் இதுநாள் வரை போரினால் பாதிக்கப்படாமல் இருந்தது. ஆகவே, இப்போது போடப்படும் அணுகுண்டின் முழுபலன் என்னவென்று தெரிந்துக் கொள்ள முடியும். மேலும் அந்நகரில் படைத்துறையின் பிரிவுகள் இருந்ததும் அது ஒரு முக்கிய இராணுவ கேந்தரமாக இருந்தது என்பதும் உப காரணங்கள் தான். வட அமெரிக்கர்களுக்கு அப்போதைய தேவை, போரினால் பாதிக்கப்படாத ஒரு முழுமையான நகரம். அது ஹிரோஷிமாவாக இருந்தது, அந்நகரத்தாரின் கெட்டநேரம். இந்நகரத்தின் மீது ‘யுரேனியம்’ அணுகுண்டு போடப்பட்டது.
பிறகு முன்று நாட்கள் கழித்து, இரண்டாம் வகை அணுகுண்டான ‘புலுட்டோனியம்’ குண்டு பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது. இம்முறை அவர்கள் தேர்த்தெடுத்தது ‘கொகுரா’(Kokura) என்னும் நகரம்தான். நாகசாகி மாற்று இலக்காகத்தான் இருந்தது. கொகுராவின் மீது அணுகுண்டு விமானம் பறந்த போது அந்நகரம் மேகமூட்டங்களால் சூழப்பட்டிருந்தது. அதன் காரணமாக அடுத்த இலக்கான ‘நாகசாகி’ அணுகுண்டுக்கு இலக்காகியது.
ஜப்பானை பயமுறுத்தி சரண் அடையவைப்பது என்பது மட்டும்தான் நோக்கம் என்றால் முதல் அணுகுண்டு மட்டுமே போதுமானது. ஹிரோஷிமாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே ஜப்பான் பெரும் அதிர்ச்சிக்குப்போனது, இந்நிலையில் இரண்டாவது தாக்குதல் தேவையற்றது. ஆனாலும் வட அமெரிக்கா இந்த இரண்டாவது தாக்குதலை நடத்தக் காரணம் என்ன?
அதற்குக் காரணம் வட அமெரிக்கா தன் கண்டுபிடிப்பை பரிசோதித்துப் பார்ப்பது என்றாலும், வேறொரு காரணமும் இருந்தது. அப்போது பலம் பொருந்திய தேசமாக முன்னின்ற சோவியத் யூனியனையும் மிரட்டி வைக்க வட அமெரிக்கா நினைத்தது. தன்னிடம் பல அணுகுண்டுகள் உள்ளன, தேவைப்பட்டால் அதை உபயோகிப்போம் என சோவியத் யூனியனுக்கு சொல்லாமல் சொல்லியது. தங்களின் வல்லரசு போட்டியில் வெல்ல அன்று வட அமெரிக்கா தயங்காமல் இக்காரியத்தை செய்தது.இதுவே பணிப்போருக்கான அடித்தளமானது.
இதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு 15, நாகசாகியில் குண்டு போடப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு ஜப்பான் சரண் அடைவதாக அறிவித்தது. செப்டம்பர் 2, 1945 சரண் அடைவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இதனால் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
அன்று வட அமெரிக்கா அறிமுகப்படுத்திய அரக்கன் இன்று உலக முழுவதும் பரவி உலகை அச்சுறுத்திக் கொண்டுள்ளான். வல்லரசு என தன்னைக் காட்டிக் கொள்ளவும் உலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முயலும் தேசங்கள் இன்று இவ்வரக்கனின் உதவியையே நாடி இருக்கின்றன. மறுபுறம் தற்காப்பு என்று காரணம் காட்டி சுண்டக்காய் தேசங்களெல்லாம் அணுகுண்டைத் தயாரிக்கின்றன.
ஒருபுறம் உலகச் சமாதானம், உலக அமைதி என கூவலிடும் தேசங்கள் மறுபுறம் உலக மானுடர்களை நொடியில் சாம்பலாக்கும் அணுகுண்டை தயாரிக்கின்றன. இதன் பொருட்டே தேசங்கள் தோரும் அணு உலைகள் கட்டப்படுகின்றன. மின்சார உற்பத்தி என்ற போலிக்காரணம் காட்டப்பட்டாலும் அதன் மறைமுக நோக்கம் அணுகுண்டு தயாரிப்பதுதான்.
இந்தியாவைப் பொருத்தவரை அதன் மொத்த மின்சார உற்பத்தியில் 2.7% மின்சாரமே அணு உலைகளால் தயாரிக்கப்படுகிறதாம். அத்தகைய குறைந்த அளவு மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிற அணு உலைகளின் தேவை என்ன? இதை ஏன் நாம் மற்ற வழிகளில் தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் நிவர்த்தி செய்துக் கொள்ள கூடாது? ஆபத்தான அணு உலைகள் தான் வேண்டும் என அரசுகள் முரண்டுப் பிடிப்பதன் உள்நோக்கம் என்ன?
அது ஒன்று மட்டுமாகத்தான் இருக்க முடியும். அது அணு மின்சாரம் என்ற போர்வையில் அணுகுண்டு தயாரிப்பது. அதற்காகவே இத்தேசத்தின் அரசு அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாட துணிகிறது. வல்லரசுகளோடு அது போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களும் பெற்றுக் கொண்ட கையூட்டுகளும் அத்தகைய சூழ்நிலைகளை உருவாக்குகிறது.
ஒவ்வொரு அணு உலையும் பல அணுகுண்டுகளுக்குச் சமம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கட்டப்படும் ஒவ்வொரு அணு உலையும் நமக்கான படுகுழிகள் என்பதை மறந்துவிடக்கூடாது.
மானுடத்தின் எதிர்காலம் அணு என்னும் அரக்கனின் அழிவில்தான் இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.
No comments:
Post a Comment