Thursday, November 3, 2011

ஏற்றத் தாழ்வை நீக்குவதே மாபெரும் மனித சாதனையாக இருக்கும்: பில் கேட்ஸ்



மானுட வாழ்வில் நிலவிவரும் ஏற்றத் தாழ்வை நீக்குவதே மானுடத்தின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்று ஹார்வர்ட் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் பேசிய மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

ஹாவர்ட் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரான பில் கேட்ஸ், அதன் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு, அதனை ஏற்று சிறப்புரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஹார்வர்ட் பல்கலையில் படித்தது எனது வாழ்வின் குறிப்பிடத்தக்க அனுபவமாகும். இங்கிருந்துதான் எனது வாழ்க்கை தொடங்கியது. 1975ஆம் ஆண்டு இங்கு படித்துக்கொண்டிருந்தபோதுதான் எனக்கு வந்த அந்த அழைப்பு இன்றுவரை நீடித்துவரும் மைக்ரோசா்ப்ட் நிறுவன வாழ்விற்கு அடித்தளமிட்டது.

ஹார்வர்டில் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் புதிய சிந்தனைகளைப் பற்றிப் படித்தேன். ஆயினும், மானுடத்தின் மிகப் பெரிய சாதனை என்பது புதிய, புதிய கண்டுபிடிப்புக்களில் இல்லை. மாறாக, அப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள், மனித குலத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வை களைய எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் உள்ளது.

ஜனநாயகம், வலிமையான பொதுக் கல்வி, தரமான மருத்துவ வசதி, விரிவான பொருளாதார வாய்ப்புகள் என்று எதுவானாலும் சரி, அவை யாவும் ஏற்றத் தாழ்வை ஒழிக்க வேண்டும் - அப்போதுதான் அது சாதனையாகும்.
எல்லா வசதிகளும் உள்ள இந்த நேரத்தில் நீங்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறீர்கள். நாங்களுக்கு கிடைக்காத தொழில்நுட்ப வசதிகள் யாவும் உங்களுக்குள்ளது. ஏற்றத் தாழ்வு தொடர்பாக நீங்கள் அறிந்துள்ள அளவிற்கு நாங்கள் அறியவில்லை. இந்த அளவிற்கு ஒரு புரிந்துணர்வோடு பட்டம் பெற்றுள்ள நீங்கள், உங்கள் சிறிய முயற்சியால் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல திறமையை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு எதையும் செய்யாமல் இருப்பீர்களானால் அது உங்களை என்றென்றைக்கும் வாட்டிக்கொண்டிருக்கும். நாங்கள் பெறாததை நீங்கள் பெற்றுள்ளீர்கள், உடனடியாகத் தொடங்குங்கள், நீண்ட காலம் உங்கள் பணியை தொடருங்கள்.

ஏற்றத் தாழ்வை ஒழிக்கத் தேவையான மாற்றம் சாதாரணமானதல்ல, அது மிகவும் சிக்கலானது. அந்தச் சிக்கல்களை வெட்டி வீழ்த்தித் தீர்வு காண நான்கு படி நிலை பாதை உள்ளது. அது, 1. இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும், 2. அதனை அடைய அதிகபட்ச சாத்தியமுடைய அணுகுமுறையை கண்டுபிடிக்க வேண்டும், 3. அதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும், 4. அந்த தொழில்நுட்பம் நீங்கள் ஏற்கனவே அறிந்த ஒன்றாக - மிக அதிக விலையுள்ள மருந்தாகவோ அல்லது மிகச் சாதாரணமான படுக்கை வலையாகக் கூட இருக்கலாம் - அதனை கண்டறியுங்கள்.

முதலில் பிரச்சனையை கண்டறிய வேண்டும். அதற்கான தீர்வு என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதனால் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிட வேண்டும். பிரச்சனையின் சிக்கல் உங்களை தடுத்து நிறுத்திவிட அனுமதிக்காதீர்கள், செயல்படுங்கள், மிகப் பெரிய ஏற்றத் தாழ்வு எதுவெனப் பார்த்து கையில் எடுங்கள். அதனைச் சாதிப்பதில்தான் உலகின் உன்னதமான அனுபவம் உள்ளது.

உங்களுடைய திறன் என்பது நீங்கள் பெற்றுள்ள கல்வித் தகுதி மட்டுமே ஆகாது, அந்தத் திறனைக் கொண்டு இவ்வுலகில் நிலவும் மிக ஆழமான ஏற்றத் தாழ்வை நீக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதிலயே உள்ளது. உங்களிடமிருந்து வெகு தூரத்திலுள்ள அந்த மக்களோடு உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, ஆனால், அவர்களையும் சேர்ந்ததே மானுடம் என்பதை புரிந்துகொண்டு செயலாற்றுங்கள்.

(ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் பில் கேட்ஸ் ஆற்றிய உரை)

No comments: