Friday, November 25, 2011

கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.



உணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உண்ணும் உணவும்தான். என்ன சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம் என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும். நோயாளிகளுக்கு மருந்து பாதி, உணவு பாதி, இரண்டும் சேர்த்துத்தான் நோயைக் குணமாக்கும். பரவலாகக் காணப்படும் நோய்களில் இருதய நோயும் ஒன்று.

நோய் வருமுன் நம் ஆரோக்கியத்தைக் காக்க ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு தேவை. இருந்தாலும் நோய் வந்த பிறகும் மனம் நொந்துவிடாமல் உணவு வகைகளால் நோய் முற்றி விடாமல் நம் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கலாம். `விருந்தும் வேண்டாம், விரதமும் வேண்டாம்'.

இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதய நோயாளிகளுக்கான உணவு (1500 கலோரிகள்) உப்பு 2 லிருந்து 3 கிராம் வரை குறைந்த அளவு கொழுப்பு - 15 கிராம் வரை

சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு அதிகாலை ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது டீ ஒரு கப்.

காலை உணவு: இரண்டு இட்லிகள் சாம்பாருடன் அல்லது இடியாப்பம் இரண்டு, அல்லது கார்ன் ஃபிளேக்ஸ் அல்லது ஓட்ஸ் கஞ்சி.

இடைப்பட்ட நேரம்: மோர் அல்லது காய்கறி சூப் அல்லது ஜூஸ்.

மதிய உணவு: நன்றாகக் குழைந்த சாதம், சாம்பார் அல்லது பருப்புடன். காய்கறி இரண்டு வகைகள், தயிர் அல்லது மோர், ஜெல்லி கலந்த பழ சாலட் அல்லது ஏதாவது ஒரு பழம்.

மாலை: அதிக நீர் கலந்த டீ அல்லது ஆடை எடுக்கப்பட்ட பால் ஒரு கப், பிஸ்கட், சுண்டல் அல்லது காய்கறி கலந்த சாண்ட்விச் இரண்டு.

இரவு சாப்பாடு: எண்ணெய் விடாத சப்பாத்தி இரண்டு, காய்கறிக் கூட்டு, பருப்பு, மோர்.

படுக்கச் செல்லுமுன்: ஆடை எடுக்கப்பட்ட பால்.


அசைவ உணவு உட்கொள்பவர்களுக்கு:

காலை:

ஆடை எடுக்கப்பட்ட பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்து உட்கொள்ளலாம். அத்துடன் ஒரு அவித்த முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக் கொள்ளலாம்.

இடைப்பட்ட நேரம்:

கொழுப்பில்லாத இறைச்சி சூப் அல்லது கோழி சூப் அருந்தலாம்.

மதியம்:

உணவுடன் கோழிக்கறித் துண்டு இரண்டு அல்லது மீன்கறித் துண்டுகள் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவு:

உணவுடன் கொழுப்பில்லாத இறைச்சி ஒரு சில துண்டுகள், பச்சையான காய்கறி சாலட் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

நினைவில் வைக்கவேண்டியவை:

முட்டையின் மஞ்சள் கரு உட்கொள்பவர்கள் வாரத்திற்கு இருமுறைக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது. (கேக், சாஸ், டெஸர்ட் வகைகளையும் சேர்த்து).

கோழியும், மீனும் வாரத்தில் 4 தடவைக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்பில்லாத இறைச்சி வாரத்திற்கு ஒருமுறை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

கொழுப்பில்லாத இறைச்சி, மீன், கோழி இவைகளைச் சமைக்கும் பொழுது கூடுமானவரை கொழுப்புக் கலக்காமல் சமைக்க வேண்டும். எப்படி என்றால். . . நீரில் வேக வைத்தல், ஆவியில் வேக வைத்தல், பேக் செய்தல் மற்றும் அதிக எண்ணெய் இல்லாமல் வறுத்தல்.

தவிர்க்கப்படவேண்டிய உணவு வகைகள்

உப்பு அதிகம் கலந்த உணவு வகைகள், கொழுப்புள்ள உணவுப் பதார்த்தங்கள், வெண்ணெய், நெய் மற்றும் தேங்காய் எண்ணெய், டால்டா, முட்டை மஞ்சள் கரு.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள், சிப்ஸ், சமூசா, அப்பளம், பஜ்ஜி, பூரி போன்றவை.

எண்ணெயில் அதிகமாக வறுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் ஊறுகாய் வகைகள்.

தேங்காய், கேக், புட்டிங்ஸ், ஐஸ்க்ரீம் வகையறாக்கள்.

இறைச்சியில் தனிப்பட்ட உறுப்புகள், பன்றி இறைச்சி, எறால் போன்றவை.

பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட கோவா, பாலாடைக் கட்டி, க்ரீம், சீஸ் வகைகள்.

முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள்.

இதய நோயாளிகள் சாப்பிடக் கூடிய உணவு வகைகள்

நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள், வேக வைத்த காய்கறிகள், முளை கட்டிய தானிய வகைகள், தோலுடன் இருக்கக் கூடிய பழங்கள், புழுங்கலரிசி, கோதுமை மாவு மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள்.

சனோலா அல்லது சஃபோலா எண்ணெய். (உபயோகிக்கும் அளவு ஒரு நாளைக்கு 4 லிருந்து 5 ஸ்பூன் வரை) பால் ஒரு நாளைக்கு 300 மி.லி. வரை சேர்க்கலாம். ஆடை எடுக்கப்பட்ட பாலின் அளவு ஒரு நாளைக்கு 500 மி.லி. முதல் 600 மி.லி. வரை.

குறிப்பு : அவசியம் மருத்துவர் குறிப்பிட்டபடி எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்

No comments: