வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும்



பேஸ்புக் எனப்படும் சமூக வலை தளம் ஒருபக்கம் எகிப்து போன்ற நாடுகளில் புரட்சிக்கு வித்திட்டபடியே, மறுபக்கம் விவாகரத்து போன்றவை அதிகம் நிகழ காரணமாக திகழ்வதாகவும் வசை பாடப்படும் நிலையில், தற்போது நிறுவனங்கள் தாங்கள் வேலைக்கு எடுக்கும் ஊழியர்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் அவர்களது திறமையை பற்றி அவர்களது பேஸ்புக் தளத்திலிருந்து அறிந்து வேலைக்கு தேர்வு செய்வதை தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினர். சுமார் 300 பேஸ்புக் பயனாளிகளின் சுய விவரங்கள், அவர்களது விருப்பு,வெறுப்பு, தொலைக்காட்சிகளில் அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள், விருப்பமான திரைப்படங்கள், இசை, புத்தகம்,பொன்மொழிகள் மற்றும் எந்த அரசியல் கட்சி அல்லது அமைப்பில் உறுப்பினர் போன்ற விவரங்களை திரட்டி, ஆய்வு ஒன்றை அவர்கள் மேற்கொண்டனர்.

இதில் சுமார் 10 விழுக்காட்டினரது குணநலன்கள் மற்றும் இதர தகுதிகள் அவர்கள் தங்களை பற்றி ஃபேஸ்புக் தளத்தி குறிப்பிட்டுள்ளதோடு ஒத்துபோனது தெரியவந்ததாக அந்த ஆய்வில் ஈடுபட்ட குழுவில் அங்கம் வகித்த கோல்பெக் என்ற கணினி அறிவியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏராளமான நிறுவனங்கள், வேலைக்கு தேர்ந்தெடுக்கும் தங்களது ஊழியர்களின் குணநலன்கள், அவர்களது கூடுதல் திறமைகள் போன்றவற்றை அறிந்துகொள்ளவும் அவர்களது பேஸ்புக் தளத்தையே நாடுவதாகவும், இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது அவ்வாறு வேலைக்கு எடுத்த பின்னர், அந்த ஊழியர்களின் திறன் மேம்பட்டுள்ளதா, தங்களது நிறுவனம் மற்றும் தாங்கள் பார்க்கும் வேலையை பற்றிய அபிப்பிராயம் என்ன?, கூடுதல் திறமைகள் எதையும் வளர்த்துக்கொண்டுள்ளனரா போன்ற விவரங்களை அறியவும் அவர்களது பேஸ்புக் தளத்தையே நாடுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

வழக்கமாக பல பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தாங்கள் பணிக்கு தேர்ந்தெடுக்க நினைக்கும் ஊழியர்களின் உண்மையான குணநலன்கள், ஆளுமை திறன், தலைமை பண்பு, கலந்துரையாடல் திறன், குழுவினரோடு இணக்கமாக செல்லும் பண்பு போன்றவை உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள பல வகையான தேர்வுகளை நடத்தி படாதபாடுபடுவது வழக்கம். இனிமேல் இந்த நிறுவனங்களுக்கு பேஸ்புக் கை கொடுக்கும் என்றால் அது மிகையில்லை என்றே சொல்லலாம்!

எனவே இளைய தலைமுறையினர்,குறிப்பாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள், பேஸ்புக்-கில் தங்களை பற்றிய விவரங்களையும், திறமைகளையும், விருப்பு வெறுப்புகளையும் பதிவேற்றும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது!